இந்தியா

மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழி கற்றுகொள்ளுங்கள் : மம்தா பானர்ஜி

webteam

மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் கட்டாயம் வங்கமொழி தெரிந்து வைத்து கொள்ளுங்கள் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. தேர்தல் முடிவடைந்ததில் இருந்து பல்வேறு போராட்டங்களும் கலவரங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். மாநிலத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தற்போது கடந்த 5 நாட்களாக மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பாஜகவே காரணம் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், குஜராத்தை போல் மேற்குவங்கத்தை மாற்ற அனுமதிக்க மாட்டேன் என மம்தா கூறியுள்ளார். மேலும் “மேற்கு வங்கத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் இனி வங்க மொழியில் தான் பேச வேண்டும். இங்கு வசிப்பவர்களும் வங்க மொழி தெரிந்து வைத்திருப்பது அவசியம். நான் பீகார்,  உத்திரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு சென்றால் அந்த மாநிலத்தின் தாய் மொழியில்தான் பேசுவேன். அத்துடன் தமிழகத்திற்கு சென்றால், தமக்கு தமிழ் மொழி பேச தெரியாது என்றாலும், சில தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பேச முயற்சிப்பேன்” எனத் தெரிவித்தார்.