இந்தியா

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது!

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது!

webteam

கேரளாவில் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). இவர் மனைவி சுசிலா (50). இவர்களது மகள் அர்ஷா (21). மகன் அர்ஜுன் (19). ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள் ளார்.  இந்நிலையில் தினமும் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில நாட்களாக வரவில்லை. அவரது வீட்டில் உள்ளவர்களையும் காணவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரது உறவினர்களும் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப் போது அங்கு ரத்தக்கறை இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது தரையிலும் சுவரிலும் ரத்தக்கறை இருந்ததை கண்டனர். பின்னர் அங்கு ரத்தக் கறை படிந்த சுத்தியல் ஒன்றையும் கத்தியையும் கண்டுபிடித்தனர். அதைக் கைப்பற்றிய போலீசார், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். ஒரு குழியில் புதிதாக மண் மூடப் பட்டிருப்பது தெரிந்தது. சந்தேகமடைந்த அவர்கள் அதைத் தோண்டினர். அப்போது கிருஷ்ணனின் உடல் கிடைத்தது.

அதற்கு கீழே அவர் மனைவி உடலும் அதன் கீழ் மகள், அதற்கு கீழ் மகன் ஆகியோர் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல கிடந்தது.

கிருஷ்ணனின் முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. சுசிலா நெஞ்சில் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். அவர்களின் உடல்கள் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சுத்தியலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கொல்லப்பட்டு புகைப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீசார், இதுபற்றி விசாரிக்க தனிப்படைகளை அமைத்தனர். இந்தக் கொலையை மூன்று பேர் சேர்ந்து செய்திருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்டவர்களின் உடலில் அதிகமான வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் இருந்து 30 சவரன் நகை காணாமல் போயுள்ளது. அங்கிருந்து 4 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு போன் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறது. அதில் யார் யார் பேசியிருக்கிறார்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

அதோடு, சம் பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளை நிற கார் ஒன்று அந்த வீட்டுக்கு வந்துள்ளது. அதில் நம்பர் ஏதும் இல் லை என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த 40 பேரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 15 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முழு விசாரணை முடிந்த பின்பே இந்த கொலை எதற்காக நடந்தது என்பது பற்றி தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ள னர்.