இந்தியா

''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி!

''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி!

webteam

இன்றைய தேதிக்கு எல்கேஜி கட்டணமே கல்லூரி கட்டணம் அளவுக்கு இருக்கிறது. கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளின் நிலைமை இப்படி இருக்க, அரசு பள்ளிகளும் கல்வித்தரத்தை மேம்படுத்தியே வருகின்றன. ''கல்வி என்பது வியாபாரம் இல்லை, அது ஒரு சேவை'' என கூறுவார்கள், அதற்கு ஏற்ப ஒரு பள்ளி அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது.

அசாம் மாநிலத்தின் தெற்கு பகுதியின் இமயமலை எல்லையில் அமைந்துள்ளது அக்சர் பள்ளி. இந்தப்பள்ளியை பர்மிதா சர்மா, மஷின் முக்தர் என்ற தம்பதி தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்தப்பள்ளியில் படிக்க வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த தேவையில்லை அதற்கு பதிலாக ஒவ்வொரு மாணவரும் ஊரில் இருந்து பொறுக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை பள்ளியில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இந்த நடைமுறையால் சுற்றுப்புறமும் சுத்தமாகும், நிதிச்சுமை இல்லாமல் மாணவர்களும் படிக்க பள்ளிக்கு வருவார்கள் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு.

ஒருமுறை ஊர்மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அதன் புகை பள்ளியெங்கும் பரவியுள்ளது. இதனைக்கண்ட பர்மிதா - மஷின் தம்பதி, பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டை தடுக்க வேண்டும் என யோசித்துள்ளனர்.

அதேவேளையில் பள்ளி தொடங்கிய காலக்கட்டத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் பல குழந்தைகள் பள்ளிக்கு வராமல் குவாரிகளில் வேலைக்கு சென்றுள்ளனர். இரண்டு பிரச்னைகளை ஒரே திட்டத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென யோசித்த தம்பதி கட்டணத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவரும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். 

பர்மிதா - மஷின் தம்பதியின் இந்த திட்டத்துக்கு ஊர்மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இலவசமாக கல்வி கிடைப்பதால் பல குழந்தைகளும் பள்ளிக்கு வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் பர்மிதா - மஷின் தம்பதி.

அக்சர் பள்ளியில் புத்தக்கப்படிப்பு மட்டும் சொல்லிக்கொடுக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சமூக கருத்துகளும் போதிக்கப்படுகின்றன. இன்னும் 5 வருடத்தில் அக்சர் பள்ளியை போல 100 பள்ளிகளை கட்ட வேண்டுமென்பதே நோக்கம் என்கிறார்கள் பர்மிதா - மஷின் தம்பதி.