இந்தியா

ஃப்ரீ கட்டிங் அண்ட் சேவிங்: போராட்டக் களத்தில் சலூன் கடை திறந்த இளைஞர்

ஃப்ரீ கட்டிங் அண்ட் சேவிங்: போராட்டக் களத்தில் சலூன் கடை திறந்த இளைஞர்

webteam

டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும், சோனு வர்தியாவும் அவரது குழுவும் கவனம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி ஹரியானா எல்லையில் விவசாயிகள் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய பிரதிநிதிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும், அரசின் கோரிக்கைகளை விவசாயிகள் ஏற்க மறுத்ததால் அங்கு தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு டெல்லி அரசு உட்பட பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

நடுங்கும் குளிரில் நாட்கணக்காக போராடி வரும் விவசாயிகளுக்கு தேவையான பால், உணவுப்பொருட்கள் கிடைக்க பல அமைப்புகள் உதவிவரும் நிலையில், விவசாயிகளுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்ய சோனு வர்தியா என்பவரும் அவரது குழுவும் முன்வந்துள்ளது. 

ஹரியானா மாநிலம் பெஹோவா பகுதியைச் சேர்ந்த சோனு வர்தியா ( 26) கடந்த 10 வருடங்களாக முடித்திருத்தம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரும் இவரது குழுவினரும் தற்போது டெல்லி எல்லை சிங்குப் பகுதியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் உள்ளிட்டவற்றை செய்ய முன்வந்துள்ளனர். 

கிரேஸி பியூட்டி சலூன் பெயரில் நடந்து வரும் இந்த சலூனானது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுகிறது. முடித்திருத்தம் செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் போராட்டக்களத்திற்கே கொண்டு வந்துள்ள இவர்கள் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களுக்கும் முடித்திருத்தம் செய்கின்றனர். 

இது குறித்து சோனு வர்தியா கூறும்போது, “ எனது முன்னோர்கள் விவசாயிகளாக இருந்த நிலையில், தற்போது ஒருவரிடம் கூட விவசாய நிலம் இல்லை” என்றார்.