இந்தியா

இளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் ! கட்டிப்பிடித்து காப்பாற்றிய போலீஸ்

உத்தரகாண்ட் மாநிலம் நைநிடாலில் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த 22 ஆம் தேதி முஸ்லீம் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் தன் தோழி ஒருவரை பார்க்க வந்துள்ளார் அந்த முஸ்லீம் இளைஞர். பின்பு, இளைஞரும் அந்தப் பெண்ணும் வெகுநேரம் சிரித்தப்படி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சில குறிப்பிட்ட அமைப்பினர் இவர்களை நோக்கி வந்துள்ளனர். இதனைக் கண்ட அந்தப் பெண், பேசுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து அந்த இளைஞரை சூழந்த கும்பல் அவரை கடுமையான சொற்களால் திட்ட தொடங்கினர்.

பின்பு, அந்த இளைஞரை தாக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங் உடனடியாக இளைஞரை காப்பாற்ற தொடங்கினார். மேலும், இளைஞரை தாக்கிய கும்பலிடம் என்ன நடந்தது என கேட்டறிந்தார். அவர் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே கூட்டத்தினர் இளைஞரை தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து, அந்த இளைஞரை கட்டியணைத்து காப்பாற்றியப்படி, சப் - இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங் பேடி இளைஞரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கையை பாராட்டி, இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் புகைப்படமும் அதிகளவில் சமூக வளைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.