இந்தியா

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒரு மல்லிகைத் தோட்டம்!

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒரு மல்லிகைத் தோட்டம்!

webteam

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மல்லிகைத் தோட்டம் அமை‌க்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவின் பண்ட்வால் மாவட்டத்தின் ஒஜாலா கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில் மல்லிகைத் தோட்டம் அமை‌க்கப்பட்டுள்ளது. மங்களூருவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இ‌ந்தப் பள்ளி 1968ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ‌80க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசால் நியமிக்கப்பட்ட இரு ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் பணியாற்றுகின்றனர்.

பாடம் நடத்த 2 ஆசிரியர்கள் போதாத நிலையில் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் மேலும் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்க பள்ளி வளாகத்தில் 25 மல்லிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பூக்களை சந்தையில் விற்று அதில் இருந்து கிடைக்கும் வருவாய் கூடுதல் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்தத் தோட்டத்தை ‌உருவாக்கி பூக்களை பறிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். 

சத்துணவு பணியாளர்கள் அதை கோர்த்து சந்தையில் விற்கின்றனர். திருமண‌ சீசன் மற்றும் திருவிழா காலங்களில் கணிசமான தொகைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த வருவாய் போதாது என்பதால் 35 தென்னை மரங்கள் மற்றும் சில பழ மரங்களும் வளர்க்கப்படுகிறது. பல நேரங்களில் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளும், மாணவர்களின் பெற்றோரும் உதவி செய்கின்றனர். மாணவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடும் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லையே என்று புலம்புவதைவிட அதற்கு தேவையான வழிமுறைகளை தொடர்ந்த‌ பின்பற்றிவரும் ஒஜாலா அரசு ஆரம்ப பள்ளி பலரது பாராட்டை பெற்று வருகிறது.