இந்தியா

"சடலங்களை லாரியில் அனுப்புவதா?" - உ.பி அரசுக்கு ஜார்கண்ட் முதல்வர் கேள்வி!

"சடலங்களை லாரியில் அனுப்புவதா?" - உ.பி அரசுக்கு ஜார்கண்ட் முதல்வர் கேள்வி!

jagadeesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்து ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் உடலைத் திறந்த லாரியில் அனுப்பி வைத்ததற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ராஜஸ்தானிலிருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 26 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி உபியின் ஆரையா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜஸ்தானிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். இப்போதும் ஊரடங்கின் காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களால் இயன்ற வகையில் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 11 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே உயிரிழந்தவர்களின் சடலங்களை தார்ப்பாலின் பையில் சுருட்டி, திறந்த வெளி லாரியில் உத்தரப்பிரதேச அரசு ஜார்க்கண்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதே லாரியில்தான் விபத்தின்போது காயம் அடைந்தவர்களும் வந்துள்ளனர். ஜார்க்கண்டுக்கு செல்லும் வழியில் இந்தக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநிலக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் " புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்திருக்கிறது. சடலங்களை லாரியில் அனுப்பியதைத் தவிர்த்திருக்கலாம். உத்தரப்பிரதேசம், பீகார் அரசுகள் முறையான ஏற்பாடு செய்து சடலங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சடலங்கள் ஜார்க்கண்ட் எல்லைக்கு வரும்போது அதற்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.