இந்தியா

7-ஆம் வகுப்பு படிக்கும் போதே “டேட்டா சயின்டிஸ்ட்” பணி - அசத்திய மாணவன்

7-ஆம் வகுப்பு படிக்கும் போதே “டேட்டா சயின்டிஸ்ட்” பணி - அசத்திய மாணவன்

webteam

12 வயது மாணவருக்கு கணினி மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்ட் பணி கிடைத்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் பொறியியல் பட்டம் படித்து வேலையில்லாமல் பட்டதாரிகள் நிறையே பேர் தற்போது தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் 12 வயது சிறுவன் ஒருவருக்கு கணினி மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்ட் வேலை கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் ஸ்ரீவஸ்தவ் பிள்ளி(12). இவர் அங்கு இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயது முதலே கணினி கோடிங்(Coding) மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. 

இந்நிலையில் தற்போது அவருக்கு ‘மோண்டேகினி’(Montaigne) என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்ட் வேலை கிடைத்துள்ளது. இதுகுறித்து சித்தார்த் கூறுகையில், “எனக்கு தற்போது 12வயது ஆகிறது. நான் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு மோண்டேகினி என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. எனக்கு இந்த வேலை கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் எனது தந்தை தான். 

ஏனென்றால் அவர் எனக்கு சிறிய வயது முதல் கணினி கோடிங்கை கற்று தந்தார். அத்துடன் அதிலிருந்த வெவ்வேறு நுணுக்கங்களையும் கற்று தந்தார். இதனால் தான் என்னால் இந்த அளவிற்கு கோடிங் செய்ய முடிகிறது. மேலும் எனக்கு கணினி மென்பொருள் நிறுவனத்தில் சிறிய வயதில் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தன்மே பக்‌ஷியை பார்த்தப் போது எழுந்தது. தன்மே பக்‌ஷி சிறிய வயதில் கூகுள் நிறுவனத்தில் ஒரு டெவலப்பராக பணிப்புரிந்து வருகிறார். அத்துடன் அவர் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பிரிவில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை பார்த்த உடன் எனக்கும் ஒரு நிறுவனத்தில் பணிப் புரிய வேண்டும் என்ற ஆசை வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

12 வயது சிறுவன் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ள சம்பவம், திறமைக்கு வயது தடையில்லை என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது. அதேபோல விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ஒருவர் தனது வாழ்வில் நினைத்த விஷயத்தை கண்டிப்பாக செய்து முடிக்க முடியும் என்பதற்கு சான்றாக சித்தார்த் விளங்கியுள்ளார்.