இந்தியா

கால்கள் முறிந்து கோமாவில் இருந்து மீண்டு வந்தப் பெண் - மருத்துவரான கதை

கால்கள் முறிந்து கோமாவில் இருந்து மீண்டு வந்தப் பெண் - மருத்துவரான கதை

சங்கீதா

எதிர்பாராத விபத்தால் எழக் கூட முடியாத நிலைக்குப் போன போதிலும், தன்னம்பிக்கையால், தடைகளை தகர்த்தெறிந்து மருத்துவப்படிப்பை முடித்து மருத்துவராகியிருக்கிறார் ஓர் இளம்பெண். கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வெற்றிக்கதையை சர்வதேச மகளிர் தினத்தில் அறியலாம்.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்கரநாற்காலியில், கழுத்தில் ஸ்டெதஸ்கோப், கைகளில் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் என வலம் வரும் மரியா, மருத்துவர் என்ற நிலையை எட்டுவதற்கு பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 12-ம் வகுப்பு முடித்து, நீட் தேர்ச்சி பெற்று மருத்துவராகும் கனவோடு இருந்த மரியா, இடுக்கி மாவட்டம் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கால்தவறி விழுந்த மரியாவுக்கு, இரண்டு கால்களும் உடைந்து, கழுத்து நரம்பு முறிந்தது. கேரளாவில் பல மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்ற மரியாவை, மீட்டளித்தது வேலூர் மிஷன் மருத்துவமனை. சுயநினைவு திரும்பியபிறகு, சக்கர நாற்காலிதான் வாழ்க்கை என்றானது மரியாவுக்கு.

ஆனாலும், மருத்துவராகும் கனவை கைவிடாத மரியாவின் தன்னம்பிக்கை கண்டு, அவருக்கு மறு ஆண்டில் மருத்துவக் கல்வியை தொடர தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது. படித்து முடித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் மாணவியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவியானார் மரியா. இப்போது எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார் மரியா.

இதுகுறித்து மரியா கூறும்போது, “தேர்வு நேரத்தில் எனக்கு விபத்து நேர்ந்தது. வேலூர் மருத்துவமனையில் எனக்கு நல்ல சிகிச்சையும், தெரபிஸ்டுகளின் பயிற்சியும் கிடைத்தது. முதல் வருட மருத்துவப்படிப்பை முடித்தபோது நம்பிக்கை வந்தது. உடல்நலப் பிரச்னைகளால் தடைகள் வந்தன. அதனை மீறி மருத்துவராக வேண்டும் என்று படித்து இப்போது மருத்துவராகியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, இலக்கை அடையும் லட்சியம் ஆகியவையுடன் தன்னம்பிக்கை இருந்தால் வானம்கூட வசப்படும் என்பதற்கு மரியா உதாரணம். நாமும் அவருக்கு நமது பாராட்டுகளை தெரிவிப்போம்.