மகாராஷ்டிராவில் குடிநீர், ஏர் கூலர் உள்ளிட்ட வசதிகளுடன் பயணிக்கும் வாய்ப்பை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்து வருகிறார்.
மும்பை மாநகரில் ஆட்டோ ஓட்டி வரும் சத்யவான் கைட் தனது ஆட்டோவில் சவாரி செய்ய வரும் பயணிகளைக் கவர பல்வேறு வசதிகளைச் செய்துள்ளார். ஆட்டோவிலேயே குடிநீர், ஏர்கூலர், வாஷ் பேசின், கம்ப்யூட்டர், செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். இந்த சேவைகளுக்காக சத்யவான் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
மூத்த குடிமக்கள் இவரது ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக பயணிக்கலாம். ஆட்டோவில் இருக்கும் மானிட்டருடன் தங்கள் செல்போனை பொருத்திக் கொண்டு, பயணிகள் பாடல்களைக் கேட்டவாறே பயணிக்கும் வகையில் தனது வாகனத்தை வடிவமைத்துள்ளார் சத்யவான்.
இது குறித்து தெரிவித்துள்ள ஆட்டோ ஓட்டுநர் சத்யவான், “என் ஆட்டோவில் நீங்கள் செல்போன் சார்ஜ் செய்துகொள்ளலாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உண்டு. வாஷ் பேசின் இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கட்டணம் இல்லை. பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டுமென யோசித்து நான் இந்த வசதிகளை செய்துள்ளேன்” என தெரிவித்தார்.