ராஜ்கோட் எக்ஸ் தளம்
இந்தியா

குஜராத்| பிரதமர் மோடியால் 2023-ல் திறக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து விபத்து!

கனமழை காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக, நேற்று டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்து விபத்து நேரிட்டது. இதில் 45 வயதான கார் ஓட்டுநர் ஒருவர் பலியானார்.

இந்த சோகம் நீங்காத நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கோட் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில், பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:கர்நாடகா| 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்.. பெற்றோர்கள் எதிர்ப்பு!

இந்த விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடியால், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் திறந்துவைக்கப்பட்டது. சரியாக ஒரு ஆண்டுக்குள் விமான நிலைய மேற்கூரை சரிந்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில், தெற்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது.

மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதேபோன்று ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரையும் விழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய விமான நிலையங்களின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதை அடுத்து சமூக வலைதளங்களில் பலரும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

இதையும் படிக்க;மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!