rs 500, robbery boy twitter, freepik
இந்தியா

"திருடு போயிருக்கிறது. உடனே வரவும்”- ஓடி வந்த உரிமையாளர்.. திருடர்களே ரூ.500 வைத்து சென்றதால் ஷாக்!

டெல்லியில் திருட சென்ற வீட்டில் திருடர்களே ரூ.500 நோட்டை வைத்துவிட்டுச் சென்றிருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

டெல்லி ரோகினி செக்டாரில் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர், தன் மனைவியுடன் வசித்து வருகிறார். அவருக்கு 80 வயது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் குர்கானில் வசிக்கும் மகனைப் பார்ப்பதற்காக தன் மனைவியுடன் கடந்த 19ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் சென்று இருநாட்கள் கழித்து அங்கு வசித்து வரும் பக்கத்து வீட்டுக்காரர் இன்ஜினீயருக்கு போன் செய்துள்ளார். ‘உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருக்கிறது; திருடு போயிருக்கிறது. உடனே வரவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனே வீட்டுக்குத் திரும்பி இடங்களைப் பார்வையிட்டுள்ளார். அங்கு எந்த சேதாரமும் ஆகவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். ஆனால், அதைவிட அவருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆம், திருடர்களே அவரது வீட்டில் ரூ.500 நோட்டு ஒன்றை வைத்துவிட்டுப் போயுள்ளனர்.

வீட்டுக்கு திருட வந்த திருடர்கள், அவரது வீட்டில் விலை உயர்ந்த பொருட்களோ, பணமோ இல்லாததால் பரிதாபப்பட்டு அவர்களே ரூ.500 நோட்டை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக, புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

robbery boys

இதேபோல் கடந்த ஜூன் 21ஆம் தேதி, கிழக்கு டெல்லியின் ஷாஹ்தராவின் ஃபார்ஷ் பஜார் பகுதியில் ஒரு தம்பதியிடம் இரண்டு திருடர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களிடம் ஏதும் இல்லை என தெரியவந்ததை அடுத்து, அந்த திருடர்களே ரூ.100 நோட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் திருடர்களே, திருட வந்த இடத்தில் எதுவும் இல்லாமல் பணத்தை வைத்துவிட்டுச் சென்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.