இந்தியா

’ஒரு அளவுதான்; எனது கணவரை 'பயங்கரவாதி' என்று அழைப்பதா!’ - ஊர்மிளா மாடோண்ட்கர் கொந்தளிப்பு

’ஒரு அளவுதான்; எனது கணவரை 'பயங்கரவாதி' என்று அழைப்பதா!’ - ஊர்மிளா மாடோண்ட்கர் கொந்தளிப்பு

JustinDurai

தனது கணவரை பயங்கரவாதி என்றும் பாகிஸ்தானியர் என்றும் சிலர் ட்ரோல் செய்வது வேதனை தெரிவித்துள்ளார் ஊர்மிளா மாடோண்ட்கர். 

பாலிவுட் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் ஊர்மிளா மாடோண்ட்கர். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் சமீபத்தில்தான் சிவசேனாவில் இணைந்தார். இவர் கடந்த ஆண்டு காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர் மொஹ்சின் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு ஊர்மிளா இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் விரைவில் தனது பெயரை 'மரியம் அக்தர் மிர்' என்று மாற்றப்போவதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஊர்மிளா சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இதுகுறித்து மனம்திறந்த ஊர்மிளா தனது கணவர் மொஹ்சின் அக்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தொடர்ச்சியான வெறுப்பு தாக்குதல்கள் நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

மோஜோ ஸ்டோரியுடனான உரையாடலில், ஊர்மிளா கூறுகையில், “எனது கணவர் ஒரு பயங்கரவாதி என்றும் பாகிஸ்தானியர் என்றும் அழைக்கப்பட்டார். எல்லைமீறி வெறுப்புணர்வை கொட்டுகின்றனர். அவர்கள் எனது விக்கிபீடியா பக்கத்தில் கூட ஊடுருவியுள்ளனர். விக்கிபீடியா கட்டுரையில் என் அம்மாவின் பெயரை ருக்ஷனா அகமது என்றும் என் தந்தையின் பெயர் சிவிந்தர் சிங் என்றும் வைத்துள்ளனர்.  உண்மையில் எனது தந்தையின் பெயர் ஸ்ரீகாந்த் மாடோண்ட்கர், என் தாயின் பெயர் சுனிதா மாடோண்ட்கர். 

எல்லாவற்றிற்கும் மேலாக, என் கணவர் ஒரு முஸ்லிம் மட்டுமல்ல, ஒரு காஷ்மீர் முஸ்லிம். நாங்கள் இருவரும் எங்கள் மதங்களை சமமான வழியில் பின்பற்றுகிறோம். அது என்னை ட்ரோல் செய்ய வழிவகை அமைத்தது.  மேலும் எனது கணவரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து குறிவைத்து வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று ஊர்மிளா மாடோண்ட்கர் வேதனை தெரிவித்தார்.