இந்தியா

”ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை”- அமித்ஷா புகழாரம்

”ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை”- அமித்ஷா புகழாரம்

நிவேதா ஜெகராஜா

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் வழியாக வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''விவசாயிகளுக்காக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, திரும்ப பெறப்படும் என்பதால், விவசாயிகள் தற்போதே தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்று அறிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் சமூக வலைதளம் வழியாக வரவேற்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில் அமித்ஷா தெரிவித்திருப்பவை:

“பிரதமர் நரேந்திர மோடியின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பு, வரவேற்கத்தக்க அரசியல் நகர்வு. பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டதை போல, இந்திய அரசு எப்போதும் விவசாயிகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் ஆதரவாகவும் துணை நிற்கும்.

பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பு மூலம் தனது மிகச்சிறந்த அரசியற்திறனை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர்” எனக்குறிப்பிட்டுள்ளார்.