இந்தியா

‘இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் மட்டுமே உள்ளது': ராகுல்காந்தி ஆவேசம்  

‘இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் மட்டுமே உள்ளது': ராகுல்காந்தி ஆவேசம்  

JustinDurai

‘’பிரதமர் மோடியை விமர்சித்தால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று அவதூறு செய்யப்படுகின்றனர்’’ என்று ராகுல்காந்தி கூறினார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்று, வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட இரண்டு கோடி கையெழுத்துக்களை  குடியரசுத் தலைவரிடம் அளிக்கச் சென்றனர்.  

ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, பிரியங்கா காந்தி உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து;ச சென்றனர். குடியரசுத் தலைவரை  சந்திக்க ஏற்கெனவே அனுமதி பெற்ற ராகுல் காந்தி அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, ‘’வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என தெரிவித்தேன். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை, விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை பிரதமரிடம் கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவில் தற்போது கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்தால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று அவதூறு செய்யப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மோடியை விமர்சித்தாலும் கூட அவரையும் பயங்கரவாதி என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது. பிரதமர் மோடி முதலாளிகளுக்காக பணம் சேர்க்கிறார்.

இளைஞர்கள் பிரதமர் மோடியை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் திறமை இல்லை. அவருக்கு ஒன்றும் தெரியாது, முதலாளிகள் சொல்வதைத்தான் அவர் கேட்பார். அவர்கள் சொல்வதைத்தான் செய்வார்.

விவசாயிகளும் தொழிலாளர்களும் தற்போது ஒன்றிணைகின்றனர், ஆனால் எப்போதும்போல் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரைக் குத்தப்படுகிறார்கள். இது துரதிர்ஷ்டமானது. மக்கள் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.