இந்தியா

முன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

முன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

webteam

நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், முன்னாள் பிரதமர்கள் யாரும் பங்கேற்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜக சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்த சூழலில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பாஜக ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 

முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக முன்னாள் பிரதமர்கள் யாரும் பங்கேற்காத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மக்களவையில் உறுப்பினராக இருந்த தேவகவுடா, இந்த முறை நடந்த தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அசாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் அண்மையில் முடிவடைந்தது.

இதனால் கடந்த நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்ற இவர்கள் இருவரும் இந்தமுறை பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்னாள் பிரதமர்கள் யாரும் இல்லாதது, இந்திய வரலாற்றில் முதலாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. துணைப் பிரதமராக இருந்த அத்வானி இம்முறை தேர்தலில் போட்டியிடாததால், துணைப்பிரதமர் பங்கேற்காத கூட்டத்தொடராகவும் இது மாறியுள்ளது.