இந்தியா

பாஜக ஆளும் 3 மாநிலங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது - திருநாவுக்கரசர்

பாஜக ஆளும் 3 மாநிலங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது - திருநாவுக்கரசர்

webteam

பிஜேபியின் கருவறைகளில் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்கப்போவது யார் என்ற தகவல்கள் பிற்பகலுக்குள் தெரியவரும். இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோராமில் எம்என்எப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், பிஜேபியின் கருவறைகளில் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் என்பதும் மோடிக்கு மாற்று ராகுல் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த வெற்றி எதிர்கால ராகுலின் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாகவும் இந்த வெற்றியை மகிழ்ச்சியோடு பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழிசை ஆதங்கத்திலே மனச்சோர்விலே கூட்டணி குறித்து பேசி வருகிறார் எனவும் பிஜேபிக்கு கூட்டணி கட்சிகளே கிடையாது எனவும் தெரிவித்தார். தமிழிசை அவரை அவரே ஏமாற்றிக்கொள்கிறார் எனவும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பது பற்றி தமிழிசை கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

ராகுல்காந்தி தான் பிரதமர் என சில கூட்டணிக் கட்சிகள் கூறிவிட்டதாகவும் சிலர் தேர்தலுக்கு பின்னால்கூட சொல்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.