பீகாரில் உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக் கூறி, இறப்புச் சான்றிதழும் அளிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
பாட்னாவைச் சேர்ந்த சன்னு குமார் என்பவர் கால் முறிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் கூறிய மருத்துவர்கள், இறப்பு சான்றிதழையும் கொடுத்துள்ளனர். உடல் மயானத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சென்ற குடும்பத்தினர், அது சன்னு குமாரின் உடல் இல்லை என்பதைக் கண்டு குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
பாட்னா அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது, சன்னு குமார் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருந்த வார்டில் சிகிச்சையில் இருந்தது தெரியவந்தது. உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்தது பற்றியும், அரசு மருத்துவமனையின் அலட்சியம் குறித்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.