தெலுங்கானாவில் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் அமைந்துள்ள பார்டி கிராமத்தில் சித்தையா என்பவர் வீட்டில் நேற்று, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், சித்தையாவின் உறவினரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்யம் என்பவர் கலந்துகொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, தெலுங்கு பாடல்களுக்கு, முத்யம் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.
இந்த நிலையில், முத்யம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 19 வயதே ஆன இளைஞர் மரணமடைந்ததிருப்பது அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பால் இறந்த 4 நாட்கள் ஆன நிலையில்,19 வயது இளைஞரின் உயிரிழப்பு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெ.பிரகாஷ்