உத்தரபிரதேச மாநிலம் கெரி மாவட்டத்தில் உள்ள லக்கிம்பூர் தாலுகாவில் அமைந்துள்ளது மிடானியா கிராமம்.
சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இந்த கிராமத்தை ஒட்டி துத்வா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அண்மையில் இந்த பகுதியில் பெய்த கனமழையினால் புலிகள் காப்பகத்திலிருந்து பெரிய முதலை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த கிராமத்திலிருந்த நீர் குட்டை ஒன்றை அடைந்துள்ளது.
முதலை நீரில் இருப்பதை அறிந்து கொண்ட கிராம மக்கள் முதலில் எச்சரிக்கையோடு இருந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் முதலை மீதிருந்த பயம் பறந்தோட அதை நாம் பிணையக்கைதியாக பிடித்துக்கொண்டு காசு பார்க்கலாம் என்ற ஆசை வந்துள்ளது.
அதன்படி குட்டையிலிருந்த முதலையை பிடித்து சங்கிலி போட்டு கட்டியுள்ளனர் கிராம மக்கள்.
இந்த செய்தி அதற்குள் வனத்துறை அதிகாரிகளின் காதுகளுக்கு எட்ட முதலையை மீட்க சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்கு கிராம மக்களோ ‘நீங்கள் செய்ய வேண்டிய பணியை நாங்கள் செய்துள்ளோம். அதனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் முதலையை கொடுக்கிறோம்’ என அடாவடியாக டீல் பேசியுள்ளனர்.
இறுதியில் போலீசாரும், அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த அதுவும் கைக்கூடாமல் போக ‘உங்கள் மீது வனவிலங்கு பாதுக்கப்புச் சட்டம் பாயும்’ என அதிகாரிகள் மிரட்டிய பிறகே முதலையை எடுத்துச் செல்ல கிராம மக்கள் அனுமதித்துள்ளனர்.