இந்தியா

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயாவிற்கு மாற்றம்?  

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயாவிற்கு மாற்றம்?  

webteam

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமணி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதற்கு முன்பு இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் (Bilkis Bano) வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். 

இந்த வழக்கு ஏற்கெனவே குஜராத் நீதிமன்றத்திலிருந்து மகாராஷ்டிரா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு எடுத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘த டெலிகிராஃப்’தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மிகவும் மூத்த நீதிபதிகளில் தஹில்ரமணியும் ஒருவர். அத்துடன் தற்போது இந்தியாவில் பணியிலுள்ள இரண்டு பெண் தலைமை நீதிபதிகளில் இவரும் ஒருவர். மேகாலயா உயர்நீதிமன்றம் மிகவும் சிறிய உயர்நீதிமன்றம். இந்த உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாகும். இதில் தற்போது அங்கு 2 நீதிபதிகள் பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.