இந்தியா

“அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை” : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்

“அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை” : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்

webteam

மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு மக்களவை கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மத்திய நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி தலையிட்டு அனைத்து விவாதங்களையும் விவாதிக்க தயார் எனவும் எதிர்க்கட்சியினர் தங்களது அமளிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அந்த சமயத்தில் புதிய ஐ.டி மற்றும் எலெக்ட்ரானிக் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுவதற்கு அனுமதி கேட்டார். சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதியளித்த பிறகு உளவு பார்த்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்த அஷ்வினி வைஷ்ணவ், “ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் சரியில்லை. மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. மென்பொருள் நிறுவனமே எந்தெந்த நாடுகளில் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்று வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறு எனக்கூறியிருக்கிறது.

ஆகவே அந்த பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பது மறுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலமாக யாருடைய அலைப்பேசியையாவது உளவு பார்த்திரிருந்தால் அதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த பின்னரே உளவு பார்க்க முடியும். அப்படியில்லாத சூழ்நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதது.

ஒருவருடைய அலைப்பேசியை உளவு பார்க்கவேண்டும் என்றால் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் உளவு பார்க்கவில்லை” என திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மக்களவை, மாநிலங்களை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.