இந்தியா

ஃபாஸ்டேக் முறைக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு

ஃபாஸ்டேக் முறைக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு

webteam

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் FASTAG எனப்படும் மின்னணு வழி பணம் செலுத்தும் முறைக்கான ஸ்டிக்கரை பொருத்திக்கொள்ள வாகன ஓட்டிகளுக்கு மேலும் ஒருமாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற வாகன போக்குவரத்துக்காக சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்த ஃபாஸ்டேக் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அனைத்து வாகன ஓட்டிகள் இந்த திட்டத்திற்கு மாறுவதற்கு வசதியாக அமலாக்கத்தை 15 நாட்களுக்கு மத்திய அரசு ஒத்தி வைத்தது. ஃபாஸ்ட் டேக் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் அதாவது ஜனவரி 14ஆம் தேதி வரை வாகன ஓட்டிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

ஃபாஸ்ட் டேக் பாதையில் செல்வோர் பிறவகையில் கட்டணம் செலுத்தினால் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் வாகனப் போக்குவரத்து விரைவாக நடைபெறுவதுடன் காத்திருக்கும் நேரம் குறைவதால் மிகப்பெரிய அளவில் எரிபொருளும் மீதமாகும் என அரசு தெரிவித்துள்ளது.

எனினும் சுங்கச்சாவடிகளில் 75 விழுக்காடு பாதைகளில் ஃபாஸ்டேக் உள்ள வாகனங்களே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 25% பாதைகளில் மட்டுமே ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் மிகவும் நெரிசல் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த தற்காலிக நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.