கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதிக்கும் காதல் சின்னத்துக்கும் இடையே ஒரு முக்கியமான தொடர்பு உண்டு.
யமுனை நதியோரம் நிற்கும் காதல் மாளிகை தாஜ்மஹாலை கட்டியவர் ஷாஜஹான் என்பதும், தனது மனைவி மும்தாஜுக்காக அதை கட்டினார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இன்றுவரை காதலுக்கு உதாரணமாக சொல்லப்படுவது ஷாஜகான் மும்தாஜின் காதல்தான்.
முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மூன்றாவது மனைவியான மும்தாஜின் இயற்பெயர் அர்ஜுமந்த் பானு பேகம். தனது அன்பின் வெளிப்பாடாக அர்ஜுமந்த் பானுவுக்கு ஷாஜஹான் கொடுத்த பட்டம்தான் மும்தாஜ் மஹால். அப்படியென்றால் அரண்மனையில் உயர்ந்த ஒருவர் எனப்பொருளாம். அந்தப்பட்டமே வரலாற்றில் அவரது பெயராகிப்போனது. ஷாஜஹானின் நிழலாகவே வலம்வந்த மும்தாஜ் 14ஆவது குழந்தைப் பேற்றின் போது காலமானார். அவர் மறைந்த நாள்தான் ஜூன் 17.
கடைசி காலத்தில் சொந்த மகனாலேயே வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட ஷாஜஹான் ஆண்டுக்கணக்கில் ஜன்னல் வழியாக தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டே இருந்தாராம். இன்று ஷாஜஹானும் இல்லை, மும்தாஜும் இல்லை. ஆனால் அவர்களின் காதல் டூயட்டை உலகத்தின் காதுகளில் பாடிக்கொண்டே இருக்கிறது தாஜ்மஹால்.