சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் நாளை விசாரிக்கப்படுகிறது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள், இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பெண்கள் அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும் சிலர் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த மாதம் ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் சன்னிதானம் வரை மட்டுமே சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முற்றியபோது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதையடுத்து சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக நவம்பர் 4 மறும் 5 ஆம் தேதிகளில் சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதில் மொத்தமாக 7300 பேர் தரிசனம் செய்துள்ளதாகவும் ஆனால் உண்மையான பக்தர்கள் 200 பேர் மட்டுமே என போலீசார் தரப்பு தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, மண்டல பூஜைக்காக சபரிமலை வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் கோயிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 42 மனுக்களும் நாளை உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகய் தலமையில் விசாரணைக்கு வருகிறது. சபரிமலை விவகாரத்தில் எந்த அற்புதமும் நடக்கப்போவதில்லை எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் இருந்து பின்வாங்க வாய்ப்பில்லை எனவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் செபஸ்டீன் பவுல் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.