இந்தியா

மாநிலங்களவையில் பலம் பெறும் பாஜக: இனி நினைத்ததை சாதிக்கும் !

மாநிலங்களவையில் பலம் பெறும் பாஜக: இனி நினைத்ததை சாதிக்கும் !

webteam

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அடுத்தாண்டு அக்கூட்டணி மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை பெற உள்ளது.

பாரதிய ஜனதா அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் அது கொண்டு வந்த பல மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலையே இருந்தது. குறிப்பாக முத்தலாக் மசோதா, நிலம் கையகப்படுத்தல் மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறினாலும் மாநிலங்களவையில் முடங்கின. 

இந்நிலையில் அடுத்தாண்டு இறுதியில் மாநிலங்களவையிலும் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 245 உறுப்பினர் கொண்ட மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தற்போது 102 இடங்கள் உள்ளன. இதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 73 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர நியமன உறுப்பினர்களும் பாஜக அணிக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை உள்ளது. இதையும் சேர்த்து பார்த்தால் பாஜக அணியின் பலம் 106 ஆக உள்ளது.

இந்நிலையில் அடுத்தாண்டு இறுதிக்குள் 80 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், பீகார், தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாரதிய ஜனதா அணிக்கு குறைந்தபட்சம் 21 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து பார்க்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மாநிலங்களவையில் 127 ஆக உயரும். இது தனிப்பெரும்பான்மையை விட அதிகம் என்பதால் அடுத்து 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் முக்கிய மசோதாக்களை தடையின்றி நிறைவேற்றும் வலிமை பாரதிய ஜனதாவுக்கு கிடைக்க உள்ளது. இது தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய நடுநிலை கட்சிகளுடனும் இணக்கமான போக்கை கடைபிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதனால் கிடைக்கும் நாடாளுமன்ற பலத்தை வைத்து பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.