கேரளாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான வயநாட்டின் எல்லையில் எல்லை வீரனாக நிற்கக்கூடிய கரிந்தண்டனை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கோழிக்கோட்டின் முடிவில் வயநாட்டின் தொடக்கத்தில், வரவேற்க கையில் அரிவாள் கம்புடன் ஆளுயர சிலையாக நின்று கொண்டிருக்கும் கரிந்தண்டன்தான் வயநாட்டிற்கு பாதை அமைத்து கொடுத்தது என்னும் ஒரு வரலாறு உண்டு.
1750 களில் கோழிக்கோட்டில் இருந்து வயநாட்டிற்கு செல்வதற்கு மலைப்பகுதிகளுக்கு இடையில் பாதை எதுவும் இல்லாமல் இருந்தது. வயநாட்டில் தேயிலை பயிர் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் கோழிக்கோடு எல்லையிலிருந்து முன்னேறி செல்கையில் பாதையில் இல்லாமல் கோழிக்கோட்டின் எல்லையில் செய்வதறியாது நின்று கொண்டிருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் கோழிக்கோட்டின் எல்லைப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று, மலை மேல் முன்னேறிச் செல்வதற்கு பாதை எதுவும் உள்ளதா என்று கேட்டுள்ளனர். ஆனால் மக்கள் யாரும் ஆங்கிலேயர்களுக்கு பாதை காட்டவில்லை. அப்படி தங்களுக்கு பாதை எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர். ஆனால் அந்த மக்களுக்கு இடையே இருந்த ஒரே ஒரு சிறுவன் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு தான் வழி காட்டுவதாகக் கூறி அவர்களுடன் சென்றுள்ளான். அவன்தான் கரிந்தண்டன்.
மலைகளுக்கு இடையே ஆங்கிலேயர்களை அழைத்துக் கொண்டு வயநாட்டின் எல்லைக்கு வந்துள்ளான் அந்தச் சிறுவன். அந்த பாதைதான் தற்போது இருக்கக்கூடிய தாமரைச்சேரி வழித்தடம். தாங்கள் வயநாட்டை அடைய பாதை ஏற்படுத்திக் கொடுத்தது சிறுவன்தான் என்ற விவரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானமும் புகழும் கிடைக்காமல் போய்விடும் என்று கருதிய அந்த ஆங்கிலேயர்கள் கூட்டம், அச்சிறுவனை அங்கேயே கொன்று விட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அங்கிருந்த ஒரு மரத்தில் அச்சிறுவனை சங்கிலியால் பிணைத்துக் கட்டியுள்ளனர். மரத்தில் கட்டியவாறு அச்சிறுவனை சுட்டுக்கொன்றனர்.
பின்னர் அந்த ஆங்கிலேயர்கள் கூட்டம் தாமரைச்சேரி வழித்தடத்தை தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என தங்களது உயர் அதிகாரிகளிடம் கூறி அதற்கான சன்மானத்தையும் பதவி உயர்வையும் பெற்றுள்ளனர். மரத்தில் கட்டியபடியே உயிரிழந்து கிடந்த கரிந்தண்டனின் உடல் மக்கிப்போன பின்னரும் நாளாக நாளாக அந்த சங்கிலியை மரத்திலிருந்து எடுக்க முடியாதவாறு மரம் வளர்ந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடிந்து, பின் நாட்களில் தாமரைச்சேரி வழித்தடத்தை கண்டுபிடித்தது கரிந்தண்டன் தான் என்பதை அறிந்து மக்கள் அந்த சங்கிலிகள் பிணைக்கப்பட்ட மரத்தை கரிந்தண்டனின் நினைவாக வழிபட தொடங்கியுள்ளனர். அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் அவ்விடத்தில் கரிந்தண்டனின் நினைவாக மரத்திற்கு கீழேயே ஒரு நினைவுச் சிலை எழுப்பியுள்ளனர். இன்னும் மக்கள் அங்கு சென்று வழிபட்டு வருகின்றனர். தற்போது அவ்விடம் ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
வயநாடு என்றவுடன் எல்லாப்பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ரம்மியமான அழகிய மாவட்டம் நினைவுக்கு வரும் என்றிருந்த காலம் சென்று தற்போது வயநாடு என்றவுடன் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நிலச்சரிவுதான் நம் அனைவருக்கு நினைவுக்கு வருகிறது.
கிட்டத்தட்ட 54 கிராமங்கள் சேர்ந்த இந்த வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலா மற்றும் புஞ்சிரிமட்டம் ஆகிய மூன்று கிராமங்களில் ஜூலை 30 2024 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த நிலச்சரிவில் பல உயிர்கள் பறிபோயின. அதன் பின்னர் கேரளத்திற்கு குறிப்பாக வயநாட்டிற்கு மக்கள் சுற்றுப்பயணம் செய்வது முற்றிலுமாகக் குறைந்து உள்ளது.
குறிப்பாக நிலச்சரிவிற்கு முன் வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு நாள் ஒன்றிற்கு 8000 மாக இருந்த மக்களின் வரத்து தற்போது 200 ஆகக் குறைந்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாவை மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய சிறு குறு தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. நிலச்சரிவு வெறும் மூன்றே கிராமங்களைத்தான் பாதித்தது. ஆனால் வயநாட்டில் நிலச்சரிவு என்று மொத்தமாக செய்திகள் பரவியதால் நிலச்சரிவால் துளியும் பாதிக்கப்படாத மீதமுள்ள 51 கிராமங்களும் பாதிப்பிற்குள்ளாகியிருப்பது அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.