கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேரள மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் இடையே ரகசிய புரிந்துணர்வு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன்.
“மாநிலம் மெல்ல மெல்ல சிரியாவாக மாறிக் கொண்டிருக்கிறது. இது கேரளாவை சேர்ந்த பெரும்பாலான சாமானியர்களின் பார்வையாக உள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அரசு தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மாநிலத்தில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டை இரண்டாக பிளவு படுத்துவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியாவின் நோக்கமாக உள்ளது. பாஜக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை டார்கெட் வைத்து தாக்குகிறார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“கேரள போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடி உள்ளோம். அவரிடம் இங்கு நிலவும் சூழலில் எடுத்து சொல்லி உள்ளோம்” என சொல்லி உள்ளார் அவர். மேலும் ஹலால் உணவு மூலமாகவும் மக்களை பிளவுபடுத்தும் பணிகள் இங்கு நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.