இந்தியா

கேரளாவில் பரவி வருவது பறவைக்காய்ச்சல்தான் - கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ

கேரளாவில் பரவி வருவது பறவைக்காய்ச்சல்தான் - கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ

Veeramani

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் இறந்து மடிந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் அவற்றில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கே.ராஜூ கூறுகையில், “ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் இறந்து மடிந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் அவற்றில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது “எச் 5 என் 8” வகை வைரஸ் என தெரியவந்துள்ளது. இதற்காக பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா வரும் கோழிகள், வாத்துகளுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு, “ஷிகெல்லா” பாக்டீரியா தாக்குதல், டெங்கு பரவல் ஆகியனவற்றிக்கு இடையே தற்போது பறவைக்காய்ச்சலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை பீதியடைய வைத்துள்ளது. சமீபத்தில் ஆழப்புழா மாவட்டம் குட்டநாடும் பள்ளிப்பாடும் கருவாற்றா பகுதிகள் மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமான வளர்ப்பு வாத்துகள் திடீரென இறந்தன. கடந்த டிசம்பர் 26ம் தேதி அதிக வாத்துகள் இறந்ததால் இரண்டு மாவட்டங்களில் இருந்தும் இறந்த வாத்துகளில் இருந்து கால்நடைத்துறையினர் மூலம் எட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அவற்றின் முடிவுகள் வந்ததில் வாத்துகள் பறவைக்காய்ச்சலால் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். இறந்த வாத்துகளுக்கு ”எச் 5 என் 8” என்ற வகை வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளின் பண்ணைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாத்துகள், கோழிகள், முட்டைகள் அழிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, அப்பகுதியில் இருந்து இறைச்சி, முட்டை ஆகியன வெளிச் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“ஏறத்தாழ 36 ஆயிரம் வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்படவேண்டி வரும். உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். ”எச் 5 என் 8” வைரஸ், மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்பிருப்பதால் அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கவச உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் இருந்து தான் கேரளாவிற்கு இறைச்சிக்கோழிகள் மற்றும் வாத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் சில பகுதிகளில் தான் பறவைக்காய்ச்சல். அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.