ஓடிசா மாநிலம் கட்டாக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 6வயது சிறுமி 8 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். கடந்த 22ஆம் தேதி பிஸ்கட் வாங்க தனது வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.குழந்தை காணாததால் பதறிய பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பள்ளி வளாகத்தில் சிறுமி ஆடைகளின்றி ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவளது உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த 25வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தற்போது கொலை வழக்காக அது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவமனை வட்டாரத்தில் இதுதொடர்பாக கூறுகையில், 13பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர்களால் முடிந்தவரை அனைத்து சிகிச்சைகளையும் அளித்தனர். ஆனால் சிறுமியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடைசி 72 மணி நேரத்தில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது எனக் கூறினர்.