இந்தியா

இந்திய கடல் பகுதியிலிருக்கும் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை கண்டறிய ரூ4,077 கோடியில் ஆய்வு

இந்திய கடல் பகுதியிலிருக்கும் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை கண்டறிய ரூ4,077 கோடியில் ஆய்வு

webteam

இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கடல் பகுதியில் உள்ள விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை கண்டறிவதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கண்ணுக்கு தெரியாத நுண்ணுரியிகள் முதல் பல அரிய உயிரினங்களையும், கணக்கிட முடியாத வளங்களையும் கொண்டிருப்பவை கடல்கள். ஆழ்கடலில் உள்ள இயற்கை வளங்கள் விலைமதிப்பற்றவை. இந்த வளங்களை மனித குலம் பயன்படுத்த முடியுமா? என அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

இந்தியாவின் கனவுத்திட்டமான ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 4 ஆயிரத்து 77 கோடி ரூபாய். 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தில் இஸ்ரோ, டிஆர்டிஓ மற்றும் அணுசக்தி துறை விஞ்ஞானிகளும் , கடற்படையினரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கடலில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கனிம வள ஆய்வு மேற்கொள்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மனிதர்களை சுமந்து கொண்டு ஆழ்கடலுக்கு சென்று ஆய்வு செய்யும் வகையில் பிரத்யேக கலனை உருவாக்க உள்ளனர். இது தவிர பருவநிலை மாற்றத்தால் கடலில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் பற்றியும் ஆழ்கடலில் பல்லுயிர் பெருக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆழ்கடல் உயிரியல் ஆய்வுக்கான நவீன கடல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும், கடல்பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது.

ஆழ்கடலில் உள்ள வளங்களை கண்டறிந்து முறையாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படையும் என அரசு நம்புகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கவும் இத்திட்டம் உதவும் என கூறும் அரசு இத்திட்டம் இந்தியாவை புதிய சகாப்தத்துக்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளது. ஆனால் இத்திட்டம் பல அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் ஒதுக்கிவிட முடியாது.