இந்தியா

“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை

“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை

webteam

சபரிமலை பிரச்னைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு என அம்மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பேசியதாக வீடியோவும், ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து பெண்கள் சிலர் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது, இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை பிரச்னைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு என அம்மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பேசியதாக வீடியோவும், ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாள செய்தி சேனல்களும் அந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. 

அந்த ஆடியோவில் ''சபரிமலை பிரச்னைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு. சபரிமலை விவகாரத்தில் அனைவரும் நம்மிடம் சரணடைந்துள்ளனர். இப்பிரச்னையை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கேரள அரசால் இந்தப் பிரச்னையை எளிதில் தீர்க்க முடியாது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பால் ஐயப்பன் கோயிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு குழப்பத்தில் இருந்தார். பெண்கள் வரத்தொடங்கினால் நடையை மூடிவிடலாமா என்று அவர் என்னிடம் ஆலோசித்தார். எதற்கும் அச்சப்படாதீர்கள். கேரள பாஜக உறுதுணையாக இருக்கும் என நான் உறுதி அளித்தேன். ஐபிஎஸ்   ஸ்ரீஜித் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அழைத்துச் செல்ல முயன்ற போது, மக்களை அழைத்து வந்து அதை தடுத்து நிறுத்தியது நாம்தான். இந்த விஷயம் வெளி உலகத்திற்கு தெரியாது'' என்று பதிவாகியுள்ளது.

ஆடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதரன் சபரிமலைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பலர் எங்களிடம் உதவிக் கேட்டு வருவதாகவும், தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் எப்படி ஈடுபடலாம் என்றே  தலைமை தந்திரியிடம் தான் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கேரளாவில் மதரீதியாக பிளவுகளை ஏற்படுத்த பாஜக நினைப்பதாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ''பாஜகவின் அருவறுப்பான அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதரீதியாக பிளவுகளை ஏற்படுத்த பாஜகவின் மாநில தலைவர்களே முயற்சி செய்தவைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்று தெரிவித்துள்ளார்.