கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகச் செவிலியை மாணவி ஒருவர் போர் வீரர் போல நின்று போராடி வருகிறார்.
ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் செவிலியர் மிருதுளா எஸ். ஸ்ரீ. 26 வயதான இவர் புதியதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு செவிலியர். கேரள மாநிலத்தையே கொரோனா நோய்த் தொற்று முடக்கிப் போட்டுள்ள நிலையில் தைரியமாக இவர், கொரோனா வார்டில் உள்ளவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறார். நோய்த் தொற்று தனக்கும் வரலாம் என்ற அச்சம் இருந்தாலும் இவரைப் போல பல செவிலியர்கள் கொரோனாவிற்கு எதிராக நின்று போர் வீரர்களைப் போல் செயலாற்றி வருகின்றனர்.
ஆனால் இதில் மிருதுளா ஸ்ரீயை பற்றிச் சொல்ல ஒரு தனித்துவமான செய்தி உள்ளது. இவர் இன்னும் முறையாக வேலைக்குச் சேரவில்லை. அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வரும் மாணவியான மிருதுளா, முறையாகச் செவிலியராக மாறுவதற்காகக் கல்லூரி சார்பில் கொடுக்கப்படும் பயிற்சிக்கானச் செவிலியராக தன் வேலையைத் தொடங்கியுள்ளார். இவர் சேர்ந்த போதே அவருக்குச் சீனாவிலுள்ள வுஹானில் இருந்து திரும்பிய நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆகவே இவரது முகத்தில் லேசான அச்சம் நிலவினாலும் அஞ்சாமல் நின்று போர் வீரரைப் போல பணியாற்றி வருகிறார்.
மிருதுளா தற்சமயம் சிகிச்சை அளித்து வருபவர்தான் இந்தியாவில் கொரோனா உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது நபர். இவர் வுஹானில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அங்கு நிலைமை தீவிரமடைந்ததும் அவர் இந்தியா திரும்பினார். ஒரு மருத்துவ மாணவருக்கு ஒரு மருத்துவ செவிலியர் சிகிச்சை அளிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இன்று இந்தியாவின் தலைப்புச் செய்தியாகி உள்ளது. காரணம் இவரைப் பற்றி ‘மன் கீ பாத்’ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிருதுளாவிடம் இது குறித்துக் கேட்ட போது, “ஆனால் இது எங்களது பணி மற்றும் வேலை. சந்தேகம் மற்றும் கவலைகள் இடையே செயல்படுவது எங்களது கடமை” எனக் கூறியுள்ளார் இந்த மருத்துவப் போராளி.