ஜி7 மாநாடு புதிய தலைமுறை
இந்தியா

உறுப்பு நாடு இல்லை; ஆனாலும் ஜி7 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா ஏன்தேவை? அரசியல் முக்கியத்துவம்என்ன?

ஜி7 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா ஏன் தேவை? முக்கியத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ். பாலமுருகன்

ஜி7 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா ஏன் தேவை? முக்கியத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.

பொருளாதாரத்தில் முன்னேறிய இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு முதலாளித்துவ நாடுகளின் அமைப்பு ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இத்தாலியில் நடைபெறும் 50வது உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். தனது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்தது. ஜி7 மாநாட்டில் இந்தியாவின் 11ஆவது பங்கேற்பு என்பதோடு, பிரதமர் மோடி தொடர்ந்து ஐந்தாவது முறையாக கலந்து கொண்டுள்ளார்.

ஜி7 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதும், கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார எழுச்சி இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைத் தவிர்த்து ஜி7 அமைப்பில் உள்ள பிற நாடுகளின் பொருளாதாரத்தை விட, இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக இருக்கிறது. விரைவில் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் சீனாவைக் கட்டுப்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சிப்பதால் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஜி7 நாடுகளின் பொருளாதார உறவுகளில் சீனாவை தவிர்த்து, அதை நட்பு நாடுகளுக்கு மாற்ற மேற்குலக நாடுகள் முயற்சிப்பதால் இந்தியா பெரும் பலனை அடையும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவுடனான சீனாவின் உறவுகள் வலுப்பெறுவது குறித்து மேற்குலக நாடுகள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றன. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்குலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக திரண்டபோது, இந்தியா நடுநிலை வகித்தது. இந்தசூழலில், இந்தியாவை தங்கள் பக்கம் வைத்து முக்கிய நட்பு நாடாக மாற்ற வேண்டும் என விரும்பும் மேற்குலக நாடுகள், முக்கிய கொள்கைப் பிரச்னைகளுக்கு வெளியே இந்தியா இருக்க கூடாது என்றும் கருதுகின்றன.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு தலைமை வகித்ததன் மூலம், உலகளாவிய பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக வெளியுறவுச் செயலர் VINAY KWATRA தெரிவிக்கிறார். உலகத் தெற்கின் நலன்கள், முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக VINAY KWATRA கூறுவதன் மூலமும், ஜி7 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியாவின் தேவை ஏன் என்பதை புரிந்து கொள்ளலாம்.