இந்தியா

பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வெறுப்பை தூண்ட முயற்சி: சோனியா காந்தி கடும் தாக்கு

Rasus

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்ட முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் 20 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நாடு முழுவதும் மக்கள் ஆதரவுடன் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களுக்கு தற்போதைய காரணம் குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும்தான் என்றாலும், நீண்ட காலமாக தேக்கி வைத்த கோபத்தின் வெளிப்பாடும் போராட்டங்களுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் மக்களை தவறாக வழி நடத்தியிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் தெரிவித்த கருத்தையே மாற்றியிருப்பதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். அவர்கள் தொடர்ந்து தூண்டும் வகையில் பேசுவதாகவும், சர்வசாதாரணமாகி விட்ட அரசின் அடக்குமுறையையும், வன்முறையையும் கண்டுகொள்வதில்லை என்றும் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி என்பதுதான் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்னை என குறிப்பிட்ட அவர், இதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே நாட்டை பிரித்தாளும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எழுப்புவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.