இந்தியா

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது!

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது!

webteam

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் 10.7% வரை உயர உள்ளது

இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, பெரும்பாலான பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் கிட்டத்தட்ட 800 திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 10.7 சதவீதம் வரை உயரும்.

2021 காலண்டர் ஆண்டிற்கான மொத்த விலைக் குறியீட்டில் (Wholesale Price Index) 10.7 சதவிகித மாற்றத்தை 2020 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்தது. பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அலுவலகம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்டதைப் போல, இந்தாண்டும் 10.7% விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்த அறிவிப்பால் காய்ச்சல், தொற்று, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயரும். இதில் பாராசிட்டமால், ஃபெனோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின், சிப்ரோஃப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் மெட்ரானிடசோல் போன்ற மருந்துகள் அடங்கும். மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2013 இன் விதிகளின்படி இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்.