முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த 12ம் தேதி நடந்தது. உலகமே உற்றுப்பார்த்த திருமணமாக இது அமைந்தது. ஆம், பாலிவுட் நடிகர்கள் தொடங்கி ஹாலிவுட் நடிகர்கள் வரை, பாடகர்கள் தொடங்கி பெரும் பெரும் பணக்காரர்கள் வரை முக்கிய பிரபலங்கள், பெரும் செல்வந்தர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தை பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்திருந்தார் ஆனந்தின் தாய் நீதா அம்பானி. ஆம், ஆனந்தே சொன்னதுபோல ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் நீதா. திருமண அழைப்பிதழில் தொடங்கி இடம், வாங்க வேண்டிய நகைகள், நடக்க வேண்டிய நிகழ்ச்சிகள் என அனைத்தையும் ஏற்பாடு செய்தவர் நீதா அம்பானிதான். கடந்த 8 மாதங்களாக திருமண ஏற்பாடுகளை பார்த்துப்பார்த்து செய்த தாயை உச்சிமுகர்ந்து பாராட்டி நன்றி கூறினார் ஆனந்த் அம்பானி.
இத்தனை வேலைகளுக்கு இடையிலும், நிகழ்ச்சிகளில் மிகவும் புத்துணர்வுடன், உற்சாகமாக இளமையாகவே தோற்றமளித்தார் நீதா. இவருக்கா 60 வயது ஆகிறது என்று கேள்வி எழும் அளவுக்கு உற்சாகத்துடனும் துருதுருவென இருந்தது நீதா அம்பானியின் செயல்பாடுகள். இந்நிலையில்தான், அவரது உணவு முறை குறித்த தகவல்கள் இணையத்தில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன.
தினசரி யோகா, கட்டுக்கோப்பான உணவு என்று தொடங்கி உடற்பயிற்சி என உடல்நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறார் நீதா. ஒவ்வொரு நாளையும் நடைப்பயிற்சியோடு தொடங்குவதுதான் அவரது வழக்கம். உடற்பயிற்சி செய்பவர் சத்தான உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறார். மதிய உணவாக பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் சூப் வகைகளை உட்கொள்கிறார். விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அதிகமாக இருக்கும் உணவை மட்டுமே தேர்வு செய்யும் நீதா, அதிக உப்பு மற்றும் சக்கரை இருக்கும் உணவு வகைகளை அரவே தவிர்க்கிறார். இரவு உணவும் அப்படித்தான் அதிகப்படியான கொழுப்பு கொண்ட உணவுகளை தவிர்த்து லைட்டான உணவு பொருட்களையே எடுத்துக்கொள்கிறார்.
இவை அனைத்தையும் தாண்டி, 60 வயதிலும் இவரது இளமைக்கு முக்கிய காரணமாக இருப்பது பீட்ரூட் ஜூஸ்தான். தினமும் பீட்ரூட் ஜூஸை ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் நீதா. காலை உடற்பயிற்சி முடிந்து, முதலில் எடுத்துக்கொள்வதே பீட்ரூட் ஜூஸ்தான். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது சருமத்தை பொளிவாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது. உடலை சுத்தமாக்குவதில் பீட்ரூட் ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான கொழுப்பையும், அதிக நார்சத்தையும் கொண்ட இந்த பீட்ரூட் ஜூஸை எப்போது தவிர்க்காமல் எடுத்துக்கொள்கிறார் நீதா. இதில் உள்ள விட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துகள் ஒட்டுமொத்த உடல்நலனையும் சமநிலையில் வைத்துக்கொள்கின்றன.
சருமத்த பளபளப்பாக வைத்திருப்பதில் தொடங்கி ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை குறைப்பது வரை பீட்ரூட் ஜூஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் இதனை தினசரி எடுத்துக்கொள்கிறாராம் நீதா. உடற்பயிற்சி, யோகாவில் தொடங்கி ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது வரை உடல்நலனுக்கு தனி கவனம் செலுத்துவதே அவரது இளமையான தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.