இந்தியா

உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு; தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு; தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

webteam

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து இந்த உலகம் இன்னும் மீளவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு தற்போது தனது கைவரிசையை காட்ட  அதுவும் ஆரம்பித்துள்ளது. 

இதனிடையே, கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ம் தேதிவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 33 ஆயிரம் பேர் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயல்திறன்மிக்க உத்தியை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதலில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்தம் 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “ தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 400 பேரில் 50 பேர் மட்டுமே மீண்டும் பிரிட்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள நபர்கள் முகவரியை மாற்றிக் கொடுத்துள்ளனர். அதனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை’‘என்றார்.