இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 நாய்க்குட்டிகளை மீட்க களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப்படை!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 நாய்க்குட்டிகளை மீட்க களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப்படை!

webteam

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும் மீட்புப் பணி நாள்கணக்கில் நடைபெறுவதுமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் அடுத்தடுத்து விழுந்த மூன்று நாய்க்குட்டிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையே களமிறங்கியுள்ளது. மொகாலி அருகே காரர் பகுதியில் 35 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் நாய்க்குட்டிகள் விழுந்தது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தரப்பட்டது.

சுமார் 6 செமீ விட்டம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சுமார் 29 மணி நேரம் நாய்க்குட்டிகள் சிக்கித் தவித்த நிலையில், தகவல் தெரிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். ஐந்து பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி நாய்க்குட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏழு மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டு, மண் அள்ளும் கருவிகள் மற்றும் குழாய்களைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை வழங்கிய போதிலும் நாய்க்குட்டிகளில் ஒன்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.