இந்தியா

தேநீர் வாங்கினால் முகக்கவசம் இலவசம்: சென்னையில் ஒரு புதுமை

தேநீர் வாங்கினால் முகக்கவசம் இலவசம்: சென்னையில் ஒரு புதுமை

webteam

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தின் வெளியே நுழைவுவாயிலின் அருகே அமைந்துள்ளது தமிழ்நாடு தேயிலை தோட்ட வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற தேநீர்க் கடை. இங்குதான் பத்து ரூபாய்க்கு தேநீர் வாங்கினால், முகக்கவசம் இலவசமாக வழங்கப்படுகிறது.

முகக்கவசம் இலவசமாக வழங்குவது பற்றி 'தினமணி' நாளிதழிடம் பேசியுள்ள கடையின் முகவர் பிரீத்தி, "அரசு பல் மருத்துவமனை அருகேயுள்ள கடையிலும், வால்டாக்ஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகேயுள்ள கடையிலும் காசு கொடுத்து தேநீர் வாங்கும் நபருக்கு முகக்கவசத்தை இலவசமாக வழங்கி வருகிறேன். கொரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டறியும் வரை தொடர்ந்து இந்தச் சேவையை செய்துவருவேன்" என்கிறார்.

"முகக்கவசத்தை இலவசமாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே மக்களிடம் இருந்துதான். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைப் பகுதியில் முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்களோ ரூ. 10 வரை விலை கொடுத்து முகக்கவசம் வாங்குவதற்குப் பதிலாக உணவுப்பண்டம் எதையாவது வாங்கலாமே எனப் பதில் கூறினர்" என்றும் தெரிவித்துள்ளார் பிரீத்தி.

மொத்தமாக முகக்கவசத்தை கொள்முதல் செய்வதால், குறைந்த விலையில் கிடைப்பதால் அவரால் தேநீருடன் இலவசமாகக் கொடுக்கமுடிகிறது. "அனைவரும் முகக்கவசம் அணிந்தால் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் குறைப்பதில் அரசுக்கு நாமும் எந்த வகையிலாவது உதவமுடியும் என்ற எண்ணத்தில் செய்துவருகிறோம்" என்கிறார் தேநீர்க்கடை முகவர் பிரீத்தி.