இந்தியா

வன்முறையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்

webteam

மகராஷ்டிராவில் மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மராத்தா பிரிவை சேர்ந்தவர்களுக்கு 16% இடஒதுக்கீடு வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கூறி கடந்த திங்கள் கிழமை மிகப்பெரிய வன்முறை வெடித்தது. ஒரு காவலர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர். 

இந்நிலையில் மும்பையில் முழு அடைப்புக்கு மராத்தா அமைப்புகள் இன்று அழைப்பு விடுத்திருந்தன. முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் திடீரென போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. முழு அடைப்புக்கு சிலர் ஒத்துழைக்காத நிலையில் கடைகளை மூடுமாறு மராத்தா அமைப்புகள் சார்பில் கூறப்பட்டது. சிலர் மறுத்த நிலையில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. திடீரென ஒரு இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவ்வளவுதான் பல இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, பள்ளிகளை மூட மிரட்டல் விடுக்கப்பட்டது, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 

மகராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இனத்தை சேர்ந்த அதிக அளவில் உள்ளனர். மாநிலத்தில் 60 % அவர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். 90 சதவீதம் நிலம் அவர்களிடம் உள்ளது. எனவே மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அவர்கள் ஓ.சி. பிரிவில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தங்களை ஓ.பி.சி. யாக கருத வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 16 சதவீதம் இட ஒதுக்கீடும் கோரினர். இதனை மாநில அரசு ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் உயர்நீதிமன்றம் அதனை தடை செய்தது. இந்நிலையிலதான் மீண்டும் இட ஒதுக்கீடு கோரியும், கோரிக்கையை நிறைவேற்றாததற்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.