ஜோ பைடன் அரசு பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. இந்தப் பயணத்தின் சில முக்கிய அம்சங்களை, அவரின் பயணக்குறிப்புகள் வழியாக இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
மோடி, வாஷிங்டன் நகரில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை முதலில் சந்திக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, தனது அமெரிக்கா பயணத்தின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா ஆகியோரையும் மோடி சந்திப்பார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி மற்றும் இந்தியாவில் சீன ஆதிக்க அச்சுறுத்தல் குறித்த விசாரிப்புகள் முக்கிய இடம் பெரும் என தெரிகிறது.
இந்த சந்திப்புகள், ஆலோசனைகளைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் தலைமை அதிகாரிகளையும் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அவர்களிடம் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கவுள்ளார் மோடி. அந்த சந்திப்பின்போது தீவிரவாதம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பங்கள், மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கக்கூடும் என்றும்; தலிபான் ஆதிக்கத்திற்கு பிறகு தீவிரவாதம் மேலும் பரவி, இதனால் அந்த பிராந்தியத்தில் மட்டும் அல்லாது, உலகத்தின் பிற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய சூழல் நிலவுவது குறித்தும் ஆலோசிக்கக்கூடும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து நியூயார்க் நகர் சென்று ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் மோடி.
இந்தியாவில் ஒருபக்கம் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி ஏற்பட்டுள்ளதால் தீவிரவாத ஊடுருவல் அச்சம் நிலவிவருகிறது. மற்றொரு பக்கம் சீன எல்லையில் பதற்றம் தொடர்கிறது. இப்படி இந்தியாவுக்கு இரட்டை தலைவலிகள் நிலவுகிறது. இவை இரண்டும் இந்தியாவை கவலையடைய செய்துள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இந்த பிரச்னைகளை கவனித்து வருகின்றன. அந்த கவனிப்பின் அடிப்படையிலேயே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தும்போதும் இந்த முக்கிய விவகாரங்கள் விவாதிக்கவுள்ளார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே "க்வாட்" என்கிற பெயரில் இந்த மூன்று நாடுகளுடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பு சீனாவின் ஆதிக்கப் போக்குக்கு எதிரான வலுவான கூட்டணி என கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் முக்கிய உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைகளில் ஆப்கானிஸ்தான் முக்கிய இடம்பெறும் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் நியூயார்க் நகரம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கே 76-ஆவது ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அந்த உரையில் கோவிட்-19 தாக்கம் மற்றும் ஐ.நாவை வலுப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து தனது கருத்துகளை பகிரவுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் ஐக்கிய நாடுகள் பொதுக்குழு மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடுகளை வலியுறுத்தவுள்ளார்.
- கணபதி சுப்ரமணியம்