சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானார் தலைநகர் டெல்லியில் ‘பாபா கா தாபா’ உணவகம் நடத்தி வரும் வயது முதிர்ந்த தம்பதிகளான கண்டா பிரசாத் மற்றும் பதாமி தேவி. தாங்கள் நடத்தி வரும் உணவகத்திற்கு யாருமே வருவதில்லை என மனம் உருகி பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அதனையடுத்து நெட்டிசன்கள் அவர்களது உணவகத்தில் குவிந்து அவர்களது உணவக தொழிலுக்கு கைகொடுத்தனர்.
இந்நிலையில் தங்களது வாழ்க்கை கதையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர் அந்த தம்பதியர்…
“எனக்கும் எனது மனைவிக்கும் பால்யத்திலேயே விவாகம் நடந்திருந்தது. எனக்கு அப்போது ஐந்து வயது. அவளுக்கு மூன்று வயது. பிரிட்டிஷ் ஆட்சியில் திருமணமாகாத பெண்களை வன்கொடுமை செய்து விடுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.
திருமணத்தை பொறுத்தவரையில் எங்கள் இருவருக்குமே ஆப்ஷன் கிடையாது. நான் அவளை விரும்பியாக வேண்டும், அவளும் என்னை விரும்பியாக வேண்டும்.
1961இல் எனது மனைவியை முறைப்படி என்னிடம் ஒப்படைத்தார்கள். இருவரும் இணைந்து இல்லற வாழ்க்கையை துவக்கினோம்.
டெல்லியில் தொழில் வாய்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்ததால் இருவரும் உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்தோம். முதலில் பழ வியாபாரம் செய்து வந்தேன். பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய இந்த உணவகத்தை ஆரம்பித்தோம்.
முப்பது ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். வியாபாரம் கொஞ்சம் சுமார் தான். அந்த வீடியோவுக்கு பிறகு உணவகத்தில் கூட்டம் கூடி வருகிறது. என்னை பொறுத்த வரையில் எனது வாழ்நாள் கனவு நேற்று தான் பலித்தது என சொல்லலாம்.
கடவுள் எல்லோரது தேவைகளையும் கவனிப்பார். ஒரு சிலருக்கு அந்த தேவையை 30, 40, 50 வயதுகளில் பூர்த்தி செய்து கொடுப்பார். எனக்கு 80 வயதில் அதை செய்து கொடுத்துள்ளார். உண்மையாக இருந்தால் ஒவ்வொருவரது ஆசையும் அவர்களது வாழ்நாளில் நிறைவேறும் என நம்புகிறேன்.
எனது மனைவியின் துணையோடு நான் இன்னும் பல நாட்கள் வாழ விரும்புகிறேன். இப்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பது எப்படி என்பதை என் மனைவி பழகி கொண்டுள்ளார். அதற்கு எனக்கு சில நாட்களாகலாம். எங்களது இளம் பருவத்தில் அவளை அழைத்துக் கொண்டு சாய் கடைக்கு செல்வது போல இப்போது அவளை அழைத்து கொண்டு செல்ல உள்ளேன்” என தெரிவித்துள்ளார் கண்டா பிரசாத்.
தற்போது அவர்களது வாழ்க்கை கதை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.