இந்தியா

குழந்தைகள் நல காப்பகத்தில் பிரபலங்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை - கர்நாடக அரசு!

EllusamyKarthik

வழக்கமாக பிறந்தநாள் மாதிரியான வாழ்வின் மிகமுக்கியமான கொண்டாட்ட நாட்களில் பிரபலங்கள், தனி நபர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கத்தில் உண்டு. அன்றைய தினம் அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளும் நேரத்தை அவர்களுடன் செலவிடுவதும் உண்டு. இந்நிலையில் பிரபலங்கள், அரசு ஊழியர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறந்தநாள் கொண்டாட தடை விதித்துள்ளது கர்நாடக அரசு. 

இந்த தடை கடந்த 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநபர்கள் தங்களது பிறந்தநாளை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடும் போது அது அவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை உருவாகக்கூடும் எனவும், அதனால் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம் என்ற கண்ணோட்டத்திலும் இந்த தடையை அரசு கொண்டு வந்துள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தடைக்கு கர்நாடக மாநில மக்கள் கலவையான ரியாக்ஷனை கொடுத்துள்ளனர். 

ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் கல்வி சார்ந்த எதார்த்த பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண முன்வர வேண்டும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பிரபலங்கள் பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவதும், பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதும் மனோ ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது அவர்களது வாதமாக உள்ளது. இதை தான் உளவியல் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். 

ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்நாளில் மிகவும் கடினமான நாட்கள் என்றால் அது குழந்தைகள் நல காப்பகத்தில் இருப்பது தான். அத்தகைய சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த கொண்டாட்டங்கள் மற்றும் பரிசு பொருட்கள் கொஞ்சம் ஆறுதலை கொடுக்கும் என தெரிவித்துள்ளார் உளவியல் மருத்துவர் ஸ்ரீதரா. 

அதே நேரத்தில் பிரபலங்கள் சில உள்நோக்கத்துடன் தான் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர் என சிலர் கருத்து சொல்லியுள்ளனர்.