உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பிற நீதிபதிகள் தங்களுக்கு ஆண் ஊழியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வீடுகளில் தற்போது பணியாற்றும் பெண் ஊழியர்களை மாற்றிவிட்டு, ஆண் ஊழியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நீதிபதிகள் தன்னைச் சந்தித்தபோது இவ்வாறு கோரியதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கு குறித்த வேலைகளை முடிக்க நீண்ட நேரம் ஆகும் என்ற சூழலில், தற்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது நீதிபதிகளை இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் கோருவது போல ஆண் ஊழியர்களை நியமிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற ஊழியர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.