மகாராஷ்டிரா மாநிலத்தில் கோகுலாஷ்டமியை ஒட்டி நடைபெற்ற உறியடி விழாவில் 2 பேர் பலியானதாக வந்த தகவலைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது அனைத்து மாநிலங்களிலும் உறியடி திருவிழா நடைபெறும். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் உறியடி விழா மிகவும் பிலபலம். உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள பானையை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி பிரமிடு அமைத்து உடைப்பர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உறியடி திருவிழாவில் பங்கேற்ற 21 வயது இளைஞர் திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் பரிதாபமாக பலியாகினார். மற்றொரு நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த நிலையில் உறியடி விழா முடிந்தபின் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற உரியடி விழாக்களில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த விழாக்களில் பங்கேற்ற 117 பேர் படுகாயமடைந்துள்ளனர்.