வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த 14 ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அங்கு கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
போலீசாரின் தடியடியை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி முதல்வரை சந்தித்த இஸ்லாமிய அமைப்புகள் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதேசமயம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வண்ணாரபேட்டையில் அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டத்தின்போது இந்துப் பெண்ணான பாக்கியலட்சுமி என்ற கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போராட்டத்தில் பங்கேற்றிருந்த இஸ்லாமிய பெண்கள் பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட தாம்புலப் பையில் "இஸ்லாமியர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.