இந்தியா

சீக்கிய சமூகமும்.. பிரதமர் மோடியும்... 2 கோடி பயனர்களுக்கு இமெயில் அனுப்பிய IRCTC!

சீக்கிய சமூகமும்.. பிரதமர் மோடியும்... 2 கோடி பயனர்களுக்கு இமெயில் அனுப்பிய IRCTC!

EllusamyKarthik

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் சீக்கிய சமூகத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள இணக்கமான உறவு குறித்த விவரங்களை ஹைலைட் செய்து ஐ.ஆர்.சி.டி.சி தனது சுமார் 2 கோடி பயனர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளது.

இந்த மெயில் அனைத்தும் கடந்த டிசம்பர் 8 முதல் டிசம்பர் 12க்குள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடி சீக்கிய சமூகத்தினரை ஆதரித்து சொல்லியிருந்த 13 தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சட்டங்கள் குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் “PM Modi and his government's special relationship with Sikh” என்ற தலைப்பில் 47 பக்க கையேட்டை ஐ.ஆர்.சி.டி.சி. மெயில் செய்துள்ளது. 

ஹிந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலத்தில் இந்த கையேடு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீக்கிய சமூகத்தினருக்கு மட்டும் தான் இந்த மெயில் அனுப்ப பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ஐ.ஆர்.சி.டி.சி மறுப்பு தெரிவித்துள்ளது. “இந்த மெயில் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம். அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல இது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அதிகார பூர்வமாக ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. 

ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது பயணிகளிடமிருந்து பெற்றுக்  கொள்ளும் மெயில் ஐடியின் அடிப்படையில் இந்த மெயிலை ஐ.ஆர்.சி.டி.சி அனுப்பியுள்ளது. இந்த கையேட்டை மத்திய அரசு குரு நானக் ஜெயந்தி அன்று கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் சுமார் 1.9 கோடி பேருக்கு இந்த மெயில் அனுப்பபட்டுள்ளது.