மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. மழையின் கோர தாண்டவத்தில் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்திற்கு முன்னர் பலர் அந்த மேம்பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தேரி பகுதியின் கிழக்கினையும் மேற்கினையும் இணைக்கும் கோக்லே மேம்பாலம் அது. அப்படிதான் துவார்கா சர்மா என்ற செக்யூரிட்டி தொழிலாளியும் அதில் நடந்து சென்றார். வழக்கமான தன்னுடைய ஒருநாள் தான் அது என்று எண்ணி, தன்னுடைய பணிக்காக காலையில் வேக வேகமாக சென்றுள்ளார் அவர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்துவிட்டது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழ, அதில் சர்மா சிக்கிக் கொண்டார்.
காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என்று சர்மா உயிர் பயத்துடன் கதறினார். 15 நிமிடம் வரை அவரது குரலுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. யாரும் அவரிடம் நெருங்கி வரவில்லை. ஒருவேளை மேற்கொண்டு பாலம் இடிந்து விழும் என்று எண்ணிகூட யாரும் வராமல் இருந்திருக்கலாம். பின்னர் ஒருவழியாக போலீஸ் ஒருவர் சர்மாவை பார்த்து அவரை காப்பாற்றியுள்ளார். அதற்குள் இடிபாட்டிற்குள் சிக்கி அவரது கால் முறிந்துவிட்டது. இங்கிருந்துதான் அவரது துரதிருஷ்டம் ஆரம்பிக்கிறது.
விபத்து என்பது எல்லா இடங்களிலும் நிகழ்வதுதான். ஆனால், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு சென்று வேலை செய்யும் சர்மா போன்ற தொழிலாளிகளுக்கு அது வித்தியாசமானது. துவர்கா சர்மாவுக்கு மும்பையில் உறவினர்கள் என்று யாரும் இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைக்காக மும்பைக்கு அவர் மட்டும் வந்துள்ளார். குடும்ப உறவினர்கள் எல்லாம் ராஜஸ்தானில் உள்ளார்கள். தொலைபேசியில் பேசி தகவல் சொன்னாலும் உறவினர்கள் அவ்வளவு சீக்கிரம் மும்பைக்கு வந்துவிட முடியாது.
விபத்தில் கால்கள் முறிந்து ரத்த காயங்களுடன் இருந்த சர்மாவை போலீஸ் அதிகாரி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனையில் உள்ள எலும்பியல் வார்டில் சேர்க்க செவிலியர் மறுத்துள்ளார். உடனடியாக அனுமதிக்குமாறு செவிலியரிடம் போலீஸ் அதிகாரி வாக்குவாதம் செய்கிறார். சில நிமிடங்கள் இந்த வாக்குவாதம் செல்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தவாறு சர்மா பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் ராஜஸ்தானில் உள்ள தன்னுடை வீட்டிற்கு தகவல் சொல்ல தன்னுடைய மொபைல் போனை கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஒரு வழியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய நண்பர் கிர்தரிலால் சிங்கை(40) பற்றி கவலை கொள்கிறார். துவர்கா சர்மாவும், கிர்தரிலால் சிங்கும் ஒரே அறையில் தங்கியுள்ளார். இருவரும் ராஜஸ்தானில் இருந்து வேலைக்காக மும்பை வந்தவர்கள். அந்தேரி கிழக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் செக்யூரிட்டியாக பணி புரிகிறார்கள். தினமும் அந்த மேம்பாலத்தின் மேல்தான் இருவரும் நடந்து செல்வார்கள். அப்படிதான் நேற்றும் இருவரும் ஒன்றாகதான் அந்த மேம்பாலத்தில் நடந்து சென்றார்கள். ரத்தக் கறை படிந்த சர்மாவின் டி-சார்டில் “நான் ராஜஸ்தான், நான்தான் எதிர்காலம்” என்ற வசனம் இருந்தது. கிர்தரிலால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்ட்ரெச்சரில் படுத்துள்ள அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கால்கள் முற்றிலும் முறிந்துவிட்டது.
நம்முடைய வாழ்விலும் இப்படியான பலரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். அட்டைப் போட்ட வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். ஹோட்டல்களில், கட்டுமான பணிகளில் என திரும்பும் திசையெங்கும் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மேம்பால பணிகளில் அவர்கள்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இங்கும் எத்தனையோ விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறந்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவே சில நேரங்களில் பல நாட்கள் ஆகிவிடும்.
மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்காக ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்து துவர்கா சர்மாவும், கிர்தரிலால் சிங்கும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இருவருடன் சேர்த்து 5 பேர் காயம் அடைந்தார்கள். மற்றவர்கள் அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை பார்த்துக் கொள்ள அவர்களது உறவினர்கள் வந்துவிட்டார்கள். சர்மாவும், சிங்கும் தங்களுடைய உறவினர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தகவல்கள் - scroll