இந்தியா

2020-21-ல் ஜிடிபி 7.7% ஆக சரியும் என கணிப்பு

2020-21-ல் ஜிடிபி 7.7% ஆக சரியும் என கணிப்பு

Veeramani

2019-20 ஆம் நிதியாண்டின் 4.2% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7% ஆக சுருங்கக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

2020-21 ஆம்  நிதியாண்டிற்கான முன்கூட்டியே மதிப்பீடுகளை அரசாங்கம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி 2020-21 முழு ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.7% சுருங்கக்கூடும் என கணித்துள்ளது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் ஜிடிபி 4.2% வளர்ச்சியுடன் இருந்தது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் இன்று வெளியிட்ட தேசிய வருமானத்தின் மேம்பட்ட மதிப்பீடுகளின்படி, இந்த நிதியாண்டில் விவசாயம் மற்றும் மின்சாரம் தவிர அனைத்து துறைகளிலும் சரிவு ஏற்பட்டது என்று கூறியது. வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறையில் மிகப்பெரிய சுருக்கம் ஏற்பட்டு, அதன் சரிவு 21.4% ஆகவும், கட்டுமானம் மற்றும் உற்பத்தி முறையே 12.6% மற்றும் 9.4% சுருக்கமும் காணப்பட்டது. 2019-20 இல் 4% வளர்ச்சி அடைந்த விவசாயத்துறை, இந்த நிதியாண்டில் 3.4% ஆக வளரும் என மதிப்பிடப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின்  சரிவு தற்போதைய கணிப்பின்படி இருந்தால், இது சுதந்திரத்திற்குப் பின்னர்  ஏற்படும் மிகப்பெரிய சுருக்கமாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க் கூறுகிறது. கடைசியாக 1979-80 இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.24%  சுருக்கத்தைக் கண்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இந்த சுருக்கம் ஏற்பட்டது என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.